தமிழக செய்திகள்

இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடுவதில் தகராறு; வாலிபர் வெட்டிக்கொலை

அகரம் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்து போனார். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர். அப்போது அகரம் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாய்ப்பேச்சு முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அதனை தடுத்து நிறுத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உடல் தகனம் செய்வதற்காக அகரம் சுடுகாடு பகுதிக்கு எடுத்து சென்றபோது இளைஞர்கள் ஒரு புறமாக மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்கிடையே ஒரு தரப்பினர் அகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை கத்தியால் கழுத்தில் வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு சுடுகாடு பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் சரிந்து கிடந்த மணிகண்டனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில், வெட்டுக் காயம் அடைந்து உயிருக்கான ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணிகண்டனை வெட்டிக்கொன்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.