தமிழக செய்திகள்

புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே கஞ்சா பங்கிடுவது தொடர்பாக தகராறு - 12 பேர் மீது வழக்குப்பதிவு

சிறைக்குள் கஞ்சா கொண்டுவரப்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே கஞ்சா பங்கிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை சிறையில் இருந்த கைதிகள், கஞ்சா பங்கிடுவது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் அது கைகலப்பாக மாறியது.

இதனை அறிந்து உடனடியாக விரைந்து சென்ற சிறைக் காவலர்கள், மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தி அவரவர் அறைகளில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்த், சின்னத்தம்பி, ராஜேஷ் உள்ளிட்ட 12 கைதிகள் மீது புழல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பலத்த பாதுகாப்பு நிறைந்த சிறைக்குள், தடை செய்யப்பட்ட கஞ்சா கொண்டுவரப்பட்டது எப்படி? இதற்கு உடந்தையாக இருந்தது யார்? என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.