தமிழக செய்திகள்

கஞ்சா விற்பதில் தகராறு: பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நண்பர் கைது

கஞ்சா விற்பதில் தகராறு: பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நண்பர் கைது

சென்னை,

கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நண்பர் கைது செய்யப்பட்டார்.

நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான வீரா மற்றும் அவருடைய நண்பரான விஜய் ஆகியோர் இணைந்து கஞ்சா விற்பனை செய்து வந்தனர். விற்பனை செய்த பணத்தை பிரிப்பதில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

இதனால், நண்பர்கள் இருவருக்கும் இடையே பகை உண்டானது. இந்த நிலையில், ரவுடி வீராவின் வீட்டு மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு, அவரது நண்பர் விஜய் ஓடிவிட்டார். இதில், வீட்டின் முன்பகுதி சேதம் அடைந்தது. அனைவரும் வீட்டின் உள்ளே இருந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கைது

வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து கிளாம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த விஜய்யை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று விஜய்யை போலீசார் கைது செய்தனர்.