தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அடுத்துள்ள அகப்பைகுளம் கிராமம், 12-வது தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஜெயக்குமார் (வயது 59). சமோசா வியாபாரியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், ஜெயக்குமார் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.
ஜெயக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை அவர் மதுவிற்கே செலவழித்து வந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயக்குமார், நேற்று தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாசரேத் காவல் நிலைய போலீசார், ஜெயக்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.