தமிழக செய்திகள்

முதல்நாளே ரெயில் சேவையில் குளறுபடி: ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரெயில்கள்.. பயணிகள் கடும் அவதி

வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரெயில்களால் பயணிகள் ரெயிலை விட்டு இறங்கி தண்டவாளத்தில் நடந்து வரும் சூழல் நிலவுகிறது.

சென்னை,

சென்னை கடற்கரை - தாம்பரம் செங்கல்பட்டு தடத்தில் தினமும், 200க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும், 2.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட வேலை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல அதிகம் பயன்படுத்துவது ரெயில் போக்குவரத்தை தான். சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து குறிப்பிட்ட இடத்துக்கு சரியான நேரத்தில் செல்ல உதவியாக இருப்பது மின்சார ரெயில்கள் தான். ஒரு நாள் மின் சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டால் சென்னையே ஸ்தம்பித்து விடும்.

இந்த நிலையில், எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் 44 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 20-ந் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவித்திருந்தது.

இதன்படி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழக்கமாக 10 மற்றும் 11வது நடைமேடைகளில் புறநகர் ரெயில்கள் நின்று செல்லும். ஆனால், தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக 5 மற்றும் 6வது நடைமேடைகளில் ரெயில்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல ரெயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், வெளியூரிலிருந்து வீடு திரும்புவோர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் ரெயில்கள், இன்று முதல் 20-30 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே, ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது.

புறநகர் ரெயில்சேவைகளில் சென்னை கடற்கரை தொடங்கி செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரெயில்களின் சேவைதான் தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தாம்பரம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்குள் வரும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நிலைமையைை சரி செய்ய பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த பிரச்சனைக்கு நடுவில் கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. தாம்பரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ஒரே டிராக்கில் இரண்டு ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் நுங்கம்பாக்கம் சேத்துப்பட்டு - எழும்பூரில் நீண்ட நேரமாக ரெயில்கள் நிற்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இதனால் பயணிகள் ரெயிலை விட்டு இறங்கி தண்டவாளத்தில் நடந்து வரும் சூழல் நிலவுகிறது. முதல்நாளே ரெயில் சேவையில் குளறுபடி ஏற்பட்டுள்ளசூழலில், இனி வரும் நாட்களில் ரெயில் சேவைகள் சீராகுமா என்பது குறித்து பயணிகள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

முன்னதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வழக்கம் போல் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் (புறநகர் நடைமேடைகள்) கையாளப்படும் புறநகர் ரெயில்கள், இன்று (20-ந்தேதி) நள்ளிரவு 12:00 மணி முதல் ஏப்ரல் 5 நள்ளிரவு 23:59 மணி வரை (45 நாட்களுக்கு) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.

சென்னை கடற்கரை-தாம்பரம்/செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/அரக்கோணம்:

இன்று முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை, அனைத்து மின்சார (EMU) ரெயில்களும் சென்னை எழும்பூரில் 6-வது நடைமேடையில் (விரைவுப் பாதை) இயக்கப்படும்.

அரக்கோணம்/காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/தாம்பரம்-சென்னை கடற்கரை:

மறுமார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரெயில்களும் இதே காலகட்டத்தில் சென்னை எழும்பூரில் 5-வது நடைமேடையில் (விரைவுப் பாதை) இயக்கப்படும்.

ரெயில் எண்கள் & நேர மாற்றம்:

இந்தக் காலகட்டத்தில் (இன்று முதல் ஏப்ரல் 5 வரை), சென்னை கடற்கரை தாம்பரம் / செங்கல்பட்டு/ காஞ்சிபுரம் / அரக்கோணம் மார்க்கத்தில் தற்போதுள்ள மின்சார ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த தற்காலிக நேர அட்டவணை இணைப்பு ஏ-வில் (Annexure-A) கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:- இந்த 45 நாட்களில் சென்னை கடற்கரை- தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.