சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பா.ம.க.வின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார். ஆனால், பா.ம.க.வின் பெயர், சின்னம் அன்புமணி தரப்புக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டனர். சட்டசபை தேர்தலில் ராமதாஸ், சசிகலா கட்சியுடன் இணைந்து வேட்பாளர்களையும் அறிவித்தார்.
தனது மகள் காந்திமதியையும் அரசியலுக்கு அழைத்து வந்த ராமதாஸ், அவருக்கு அன்புமணிக்கு வழங்கிய பா.ம.க. செயல்தலைவர் பதவியை வழங்கினார். சட்டசபைத் தேர்தலில் காந்திமதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாங்கள்தான் உண்மையான பா.ம.க. எனக் கூறி பிரசாரம் செய்தார். இதற்கிடையே தேர்தல் முடிந்த பின்னர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து, டாக்டர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ராமதாஸின் இந்த திடீர் முடிவால் அவரது மகள் காந்திமதி அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், தந்தையின் மீது அதிருப்தியில் இருக்கும் காந்திமதி, தனுஷ் விரைவில் தொடங்க இருக்கும் அரசியல் கட்சியில் இணைய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, நடிகர் தனுஷ் தமிழக எழுச்சிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், இதற்கான முன்னேற்பாடுகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், தனுஷ் கட்சியில் சேர காந்திமதி விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக அவர் நடிகர் தனுஷை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.