சென்னை,
கூட்டாட்சி உயர்நிலைக் குழுவை கலைத்தது தமிழக அரசின் தவறான முடிவு என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
மத்திய – மாநில உறவுகள் குறித்தும், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்காக முந்தைய திமுக. அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவைத் தமிழ்நாடு அரசு கலைத்திருப்பது தவறானதும் வருந்தத்தக்கதுமான முடிவு.
இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநிலங்களின் அரசியலமைப்பு உரிமைகளையும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான அறிவுசார் மற்றும் அரசியல் முயற்சியைத் தொடர்ந்து முன் எடுத்துச் செல்லாமல், கைவிடுவது தமிழ்நாட்டின் உரிமை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துவதாகும்.
மாநிலங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநில சுயாட்சி, நிதி அதிகாரம், ஆளுநரின் அதிகார வரம்பு, சட்டமன்றங்களின் உரிமைகள் உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளை ஆராய்வதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையை முழுமையாகப் பரிசீலித்து, தேசிய அளவிலான விவாதமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தருணத்தில், அதன் பணியை முடக்குவது தவறான அணுகுமுறை.
மேலும், அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளபடி, பணிகள் மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுவது மட்டுமே இந்தக் குழுவின் தேவையை நிறைவேற்றிவிடாது. குறிப்பாக, அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் குறித்த ஆழமான ஆய்வை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான நிபுணர் குழு மிகச்சிறப்பாக தனது பணியை மேற்கொண்டது.
இன்றைய இந்திய அரசியல் சூழலில், மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதும், மாநிலங்களின் அரசியலமைப்பு உரிமைகள் தொடர்ந்து பலவீனப்படுத்தப்படுவதும் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்துகின்றன. இத்தகைய சூழலில், கூட்டாட்சியைப் பாதுகாப்பதற்கும் மாநிலங்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டுமே தவிர, கைவிடப்படக் கூடாது.
அரசியல் ஆட்சி மாற்றங்கள் இயல்பானவை. ஆனால், மாநிலங்களின் உரிமைகள், அதிகாரப் பகிர்வு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பது போன்ற அடிப்படையான நோக்கங்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவை. அவை ஆட்சி மாற்றங்களைக் கடந்து தொடரப்பட வேண்டியவை.
இது தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல. இந்தியாவை உண்மையான கூட்டாட்சிக் குடியரசாகவும், மாநிலங்களின் உரிமைகளுக்கு உரிய மதிப்பளிக்கும் ஜனநாயக நாடாகவும் உருவாக்க விரும்பும் அனைவரின் கவலையாகும். மாநில சுயாட்சி என்பது பிரிவினைக்கான குரல் அல்ல, வலுவான, சமத்துவமான இந்தியக் கூட்டாட்சிக்கான அடிப்படைக் குரல்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.