சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு. அவருக்கு பதிலாக நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா மாணிக்கம் தாகூர் எம்.பி. புதிய மாநிலத் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்டார். பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாணிக்கம் தாகூர் பதவியேற்கும் விழா நடைபெற்றது.
இதில்,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பதவி ஏற்ற நிலையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை (2-ந் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் துனைத்தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ராஜேஷ்குமார் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.