சென்னை,
அம்மா பேரவையின் சார்பில் சனிக்கிழமைதோறும் மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு
கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில் சனிக் கிழமைதோறும் எழுச்சிமிகு மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள்! 25.7.2026 முதல் 17.4.2027 வரை
* கழக புரட்சித் தலைவி அம்மா பேரவையின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும்,
* நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, தட்டுத் தடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய பொய்க்கால் குதிரை அரசின் பொய் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறுவது சம்பந்தமாகவும்;
* கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு, மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவையின் சார்பில், வருகின்ற 25.7.2026 முதல் 17.4.2027 வரை, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், பேரவை உறுப்பினர்களும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு சனிக்கிழமைதோறும் நடைபெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக புரட்சித் தலைவி பேரவையின் மாநில துணை நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குவார்கள்.
வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் புரட்சித் தலைவி அம்மா பேரவையின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்து, சிறப்பான முறையில் நடத்திட வேண்டும்.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.