சென்னை,
கடந்த 10ஆம் தேதி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு சென்ற வீடியோவை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் சர்ச்சையாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 10-ம் தேதி சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு வருகை தந்திருந்தார். அவர் வனத்துறை ஊழியர்களுடன் வனப்பகுதிகளுக்குள் சென்று உள்ளார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளை ஆபத்தை உணராமல் ரோந்து வாகனத்திலிருந்து இறங்கி விரட்டித் தொந்தரவு செய்துள்ளதாக தெரிகிறது அதை வீடியோவாகப் பதிவு செய்து 'ரீல்ஸ்' ஆகவும் வெளியிட்டுள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகத்திற்குள் வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதோடு அதனை விளம்பரப்படுத்தும் விதமாக இணையத்தில் பதிவிட்டுள்ளது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண பொதுமக்களோ அல்லது சுற்றுலாப் பயணிகளோ வனப்பகுதியில் விதிகளை மீறினால் உடனடியாக அபராதம் விதித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் வனத்துறை அதிகாரிகள் அமைச்சர் வன்னியரசின் இந்தச் செயலுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? எனப் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற நிலையில் அமைச்சரே விதிகளை மீறி வனவிலங்குகளை தொந்தரவு செய்து அதை வீடியோவாக பதிவு செய்த விவகாரத்தில் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின், வன ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.