சென்னை,
சென்னையில் விவாகரத்து வழக்கு காரணமாக நடந்த வாக்குவாதம் முற்றியபோது, மாமனாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மருமகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர் அடுத்த செனாய்நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் பிரீத்திக்கும், கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜித் (வயது 48) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த பிரீத்தி, விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பிரீத்தி செனாய்நகரில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
மனைவி பிரிந்து சென்றதற்கு மாமனார் விஜயகுமாரே காரணம் என நினைத்து ஆத்திரத்தில் இருந்த ஸ்ரீஜித், நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து சென்னை வந்து மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த ஏர் துப்பாக்கியால் விஜயகுமாரை நோக்கி இருமுறை சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக குண்டுகள் சுவற்றில் பட்டதால் விஜயகுமார் காயமின்றி தப்பினார்.
இதுகுறித்து விஜயகுமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த அண்ணாநகர் போலீசார், ஸ்ரீஜித்தை கைது செய்து அவரிடம் இருந்து ஏர் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், துப்பாக்கி எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.