தமிழக செய்திகள்

விவாகரத்து வழக்கில் பரபரப்பு - விஜய்யின் மனைவி புதிய மனு

செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சங்கீதா இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை, சென்னை நீலாங்கரையில் உள்ள தங்களுக்குச் சொந்தமான இல்லத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று சங்கீதா கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் மனுவில், ’விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு விஜய் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார். விஜய் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் என்னை மிரட்டுகிறார்கள். தற்போது வீடு இல்லாமல் மிகவும் கடுமையாக தவித்து வருகிறேன். விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டில் எனக்கும் சரிபாதி உரிமை உள்ளது. பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்துவருவதால் சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை. விவாகரத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் என்னை விஜய் அனுமதிக்க வேண்டும்.

திரைப்படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும், குழந்தைகளுக்கும் சேர வேண்டியதை நியாயமாக வழங்க வேண்டும். பலமுறை முயற்சி செய்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்.

விஜயை திருமணம் செய்து 26 வருடங்கள் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் விஜயை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொண்டேன்' என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் தரப்பில் இருந்து எந்த அதிகாரபூர்வமான விளக்கமும் வெளியிடப்படவில்லை. விவாகரத்து வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.