தமிழக செய்திகள்

விவாகரத்து வழக்கு... காணொலி மூலம் ஆஜராக விஜய் மனு

ஜூன் 15 அன்று காணொலி மூலம் ஆஜராக அனுமதி கேட்டு விஜய் தரப்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு,

விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு கோரிக்கைகளையும் பரிசீலித்த கோர்ட்டு விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அதில், 2021 முதல் தாங்கள் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனக்கு அழுத்தம் கொடுத்தால் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை வெளியிட நேரிடும் என்றும் அந்த மனுவில் அவர் எச்சரித்திருந்தார்.

இன்று (ஏப்ரல் 20) இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சசிகலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி, வரும் ஜூன் 15-ம் தேதி நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

Also read:விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: கோர்ட்டு எடுத்த திடீர் முடிவு

இதனைத்தொடர்ந்து, ஜூன் 15-ம் தேதி அன்று நேரில் ஆஜராகாமல், காணொலிக் காட்சி (Video Call) வாயிலாக ஆஜராக அனுமதி கோரி விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது குடும்பப் பிரச்சினை என்பதால், இது குறித்து ஊடகங்களில் விவாதிக்கவோ அல்லது செய்திகள் வெளியிடவோ தடை விதிக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சங்கீதாவும் நேரில் ஆஜராகாமல் காணொலிக் காட்சி (Video Call) வாயிலாக ஆஜராக மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே, இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிடுவது (Mutual Consent) எனச் சுமூக முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஜூன் 15-ம் தேதி இருவரின் நேரில் அல்லது காணொலி வாயிலான விளக்கத்திற்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.