லக்னோ,
ஜப்பானிய தம்பதியினர் கடந்த 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பாரம்பரிய இந்து முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
ஜப்பானைச் சேர்ந்த தம்பதியினர் ஹிரோ சிஹாரா மற்றும் ஷிசு ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். எனினும், இவர்களின் இந்திய நண்பர்களின் ஊக்குவிப்பு மற்றும் ஆலோசனையால் ஒரு வருடத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து வாழத் தொடங்கினர்.
இந்த நிலையில், கடந்த (சனிக்கிழமை) அன்று லக்னோவில் நடைபெற்ற தங்களின் நெருங்கிய நண்பர் பங்கஜ் ஜோஷியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக இவர்கள் இந்தியா வந்திருந்தனர். அப்போது அங்கு நடைபெற்ற பாரம்பரிய இந்து திருமணச் சடங்குகள் மற்றும் கலாச்சாரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட இத்தம்பதியினர், தங்களின் மறுமணத்தையும் அதே முறையில் நடத்த முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த (திங்கட்கிழமை) அன்று லக்னோவின் கோமதி நகரில் உள்ள ராதா-கிருஷ்ணா கோவிலில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மணமகன் ஹிரோ குர்தா-பைஜாமாவும், மணமகள் ஷிசு பாரம்பரிய சல்வார்-குர்தாவும் அணிந்திருந்தனர். மாலை மாற்றுதல், நெற்றியில் குங்குமம் வைத்தல் மற்றும் அக்னியை வலம் வருதல் உள்ளிட்ட அனைத்துச் சடங்குகளும் முறைப்படி நடத்தப்பட்டன.
இவர்களின் 3 குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் இந்திய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றன.