தூத்துக்குடி,
தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் ஒப்பந்தம் உப்பள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்தானது.
தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கும், தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையே 2026-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தை, தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் உற்பத்தியாளர்கள் தரப்பில் தூத்துக்குடி சிறு அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொழிலாளர்கள் தரப்பில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யூ.சி., அண்ணா உப்பளத் தொழிலாளர் சங்கம், வேப்பலோடை உப்பளத் தொழிலாளர் சங்கம், தூத்துக்குடி உப்பு சுரண்டல் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட ஏழு தரப்பினர் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பினரும் ஏகமனதாகப் போனஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் விவரம் பின்வருமாறு:
2026-ம் ஆண்டில் குறைந்தபட்ச முழு அளவிலான வேலையில் பணியாற்றிய உப்பு வாருதல் தொழிலாளர்களுக்கு ரூ.11,000 மற்றும் பிற பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ.10,675 தீபாவளி போனஸாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை வருகிற நவம்பர் 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வழங்கப்படும் 9 நாட்கள் விடுமுறைச் சம்பளத்துடன், சட்டமன்றத் தேர்தல் விடுமுறை நாளுக்கான சம்பளத்தையும் சேர்த்து மொத்தம் 10 நாட்களுக்கான விடுமுறைச் சம்பளம் வழங்கப்படவுள்ளது. தொழிலாளர்களுக்கு மிதிவண்டி மற்றும் கண்ணாடி வாங்குவதற்காக ரூ.400 வழங்கவும் ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.