சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மதுப்பிரியர்களை குஷிப்படுத்தும் வகையில், டாஸ்மாக் கடைகளில் 20 புதிய வகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதில் குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் 4 புதிய ரக பீர்களும் விற்பனைக்கு வரவுள்ளன.
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள் மற்றும் எலைட் கடைகளில் தற்போது ஒட்டுமொத்தமாக 800-க்கும் மேற்பட்ட மதுபான தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உள்ளூர் மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படும் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா மற்றும் பீர் வகைகள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் மது வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.
தற்போது டாஸ்மாக் கடைகளில் கிங்பிஷர், பிரிட்டிஷ் எம்பயர், எஸ்.என்.ஜே. 10000, ஸ்பீல் ட்ரிபிள் ஸ்ட்ராங், பிளாக் பேர்ல், டியூபார்க், கார்ல்ஸ்பெர்க், பட்வைசர், ஹேவர்ட்ஸ் 5000, காட்பாதர், பூம், மேக்ஸ் 11000, ஜிங்காரோ, கல்யாணி பிளாக் லேபிள், புல்லட், வுட்பெக்கர், பிளாக் பஸ்டர் உள்ளிட்ட 21 பீர் ரகங்கள் விற்பனையில் உள்ளன.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகை காலத்தில் மது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக 20 வகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போது புழக்கத்தில் இருக்கும் பீர் ரகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயரவுள்ளது.
வெளிமாநில பீர் ரகங்கள் - ஆரம்ப விலை என்ன?
புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள 4 பீர் ரகங்களும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன. அதன்படி:
• பிர்ரா (Bira)
• கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹெய்னகென் சில்வர் (Heineken Silver)
• சத்தீஸ்கரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிம்பா ரோர் (Simba Roar)
• லோன் உல்ப் (Lone Wolf)
ஆகிய 4 பிராண்டுகள் டாஸ்மாக் பட்டியலில் இணைகின்றன. இந்த புதிய பீர் ரகங்களின் ஆரம்ப விலை குறைந்தபட்சம் ரூ.250 ஆக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி பண்டிகையையொட்டி முதற்கட்டமாக இந்த புதிய பீர் ரகங்கள் அனைத்தும் டாஸ்மாக்கின் 'எலைட்' மதுபானக் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மதுபானக் கடைகளில் வழக்கத்தை விடக் கூட்டம் அலைமோதும் என்பதால், இந்த புதிய ரகங்களின் அறிமுகம் மதுப்பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.