சென்னை,
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிகத்தில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்த நிலையில், பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, தங்கள் குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இதனிடையே தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காக தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக இதுவரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 104 அவசர அழைப்புகள் பெறப்பட்டிருப்பதாகவும், அதே போல் இதர தீ விபத்துகள் தொடர்பாக 56 அவசர அழைப்புகள் என மொத்தம் 160 அவசர அழைப்புகள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக, தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது ஏற்பட்ட தீ விபத்துகள் காரணமாக 1,116 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதாக தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த 597 ஆண்கள், 98 பெண்கள் மற்றும் 290 குழந்தைகள் என மொத்தம் 985 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருப்பதாகவும், 103 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 19 குழந்தைகள் என 131 பேர் பட்டாசு தீக்காயம் தொடர்பாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தீயணைப்பு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.