தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 6,493 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பம்

இதுவரை 6,218 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 6,493 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்புத் துறைக்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தற்காலிக மற்றும் நிரந்தர பட்டாசு கடை அமைக்க விற்பனை உரிமம் கோருவோர், தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம். இதில், தீயணைப்புத் துறையின் சான்றிதழ் கிடைத்த பின்னரே, பிற துறைகளிடம் சான்றிதழ் பெற முடியும்.

பட்டாசு கடைகள்

அதன்படி, நடப்பாண்டில் தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு இதுவரையில் தீயணைப்புத் துறைக்கு 9 ஆயிரத்து 995 விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. இதில் நிரந்தர பட்டாசு கடைகள் அமைக்க 3 ஆயிரத்து 495 விண்ணப்பங்களும், தற்காலிக கடைகள் அமைக்க 6 ஆயிரத்து 493 விண்ணப்பங்களும் வந்துள்ளன.

இதில் 6,218 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3,357 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் கள ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 420 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது.

சென்னையில்...

இதில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 1,778 நிரந்தர மற்றும் 14 தற்காலிக பட்டாசு கடைகளுக்கும், கோவை மாவட்டத்தில் 10 நிரந்தர கடைகளுக்கும். 865 தற்காலிக கடைகளுக்கும், சேலம் மாவட்டத்தில் 22 நிரந்தர கடைகளுக்கும், 715 தற்காலிக கடைகளுக்கும் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரையில், 453 தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்காக மட்டுமே அனுமதி கேட்டுள்ளனர். இதில் 35 கடைகளுக்கு தற்போது வரையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT