சென்னை,
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் பட்டாசுகளில் 90 சதவீதம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட் டாசு உற்பத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. ஒரு சில பட்டாசு ஆலைகள் தங்கள் உற்பத்தியை காலதாமதமாக தொடங்கின. வெடி விபத்துகள் ஏற்பட்ட நிலையில் ஆய்வு நடந்தது. விதிமீறல் காரணமாக பல ஆலைகளில் உற்பத்திக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இதனால் 2 மாதங்கள் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பல பட்டாசு ஆலை நிர்வாகங்கள் தாமாக முன்வந்து உற்பத்தியை நிறுத்திக் கொண்டன. இதனால் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டு தற்போது வரை சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இது கடந்த ஆண்டைவிட ரூ.2 ஆயிரம் கோடி குறைவு ஆகும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் நேற்று மாலையுடன் 90 சதவீத பட்டாசு ஆலைகள் இந்த ஆண்டுக்கான உற்பத்தியை முடித்துக்கொண்டன. தங்கள் பட்டாசு ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகங்கள் போனஸ் வழங்கின. தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று இரவு தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்தனர். இதனால் சிவகாசி பஜாரில் கூட்டம் அலைமோதியது. வியாபாரம் களைகட்டியது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தியை வருகிற 20-ந்தேதி முதல் தொடங்க பல பட்டாசு ஆலைகள் முடிவு செய்துள்ளன. அதுவரை பட்டாசு ஆலைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும்.