தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை: சிறுமுகையில் கைத்தறி பட்டுச்சேலை தயாரிக்கும் பணி மும்முரம்

மென் பட்டுச்சேலைகள் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை,

கைத்தறி நெசவுத்தொழில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வட்டார பகுதி கைத்தறி நெசவுத்தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சிறுமுகை மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஆலாங்கொம்பு, திம்மராயம்பாளையம், மூலத்துறை, வெள்ளிக்குப்பம்பாளையம், கிச்சகத்துர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் நெசவுத்தொழிலை செய்து வருகின்றனர்.

சிறுமுகை வட்டார பகுதியில் உள்ள நெசவுத்தொழிலாளர்கள் காட்டன், கோரா காட்டன், மென்பட்டு, முகூர்த்த புடவைகள், வரவேற்பு புடவைகள், கிப்ட் புடவைகள், சீருடைகள் ஆகிய கைத்தறி பட்டுச்சேலை ரகங்கள் காண்போர் மனதை கவரும் வண்ணம் பல வண்ணங்களில் தயாரித்து வருகின்றனர்.

தயாரிக்கும் பணி மும்முரம்

இதில் மென் பட்டுச்சேலைகள் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறுமுகை வட்டார பகுதியில் இருந்து நெசவுத்தொழிலாளர்கள் தயாரிக்கும் கைத்தறி பட்டுச்சேலைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நெருங்கும்போது சிறுமுகை வட்டாரப் பகுதியில் கைத்தறி பட்டுச்சேலைகள் தயாரிக்கும் பணியில் நெசவுத் தொழிலாளர்கள் முழுமூச்சில் ஈடுபடுவார்கள். அதேபோல் இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி பட்டுச் சேலை தயாரிக்கும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தனி சிறப்பு

இந்த ஆண்டு 150-ல் இருந்து 200 வரை புத்தம் புது டிசைன்கள் மற்றும் பேட்டர்ன்களில் பல வண்ணங்களில் கைத்தறி பட்டுச்சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. பண்டிகை காலங்களை முன்னிட்டு தயாரிக்கப்படும் கைத்தறி பட்டுச்சேலைகளை வாங்குவதன் மூலம் நெசவுத்தொழிலையே நம்பி இருக்கின்ற நெசவுத்தொழிலாளர்களின் வாழ்க்கையும் உயரும். மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகை வட்டாரப் பகுதி கைத்தறி பட்டுச்சேலை தயாரிப்பதில் தனி சிறப்பு பெற்று விளங்கி வருகிறது.

SCROLL FOR NEXT