மதுரை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து, ஒரு கிலோ மல்லிகை ரூ.1,400-க்கு விற்பனையானது. மழையால் விளைச்சல் குறைந்தபோதிலும், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் இன்று விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி பூக்களின் விலை சற்று உயர்ந்தது. அதன்படி மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.1400 என விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிலோ பூவானது ரூ.600 முதல் ரூ.1200 வரை விற்கப்பட்ட நிலையில் நேற்று சற்று விலை உயர்ந்து காணப்பட்டது.
மதுரை மார்க்கெட்டில் பூக்கள் விலை நிலவரம் (கிலோவிற்கு)
• மல்லிகை: ரூ.1,400 (நேற்று முன்தினம் ரூ.600 முதல் ரூ.1,200 வரை விற்கப்பட்டது)
• கனகாம்பரம்: ரூ.1,500
• பிச்சி & முல்லை: தலா ரூ.1,000
• அரளி: ரூ.500
• பன்னீர் ரோஸ்: ரூ.250
• பட்டன் ரோஸ் & சம்பங்கி: தலா ரூ.200
• ரோஸ் & செவ்வந்தி: தலா ரூ.150
• மரிக்கொழுந்து: ரூ.120
• கோழிக்கொண்டை: ரூ.90
• செண்டு மல்லி: ரூ.60
• தாமரை (ஒன்றுக்கு): ரூ.40
கடந்த சில வாரங்களாக வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைந்திருந்தது; ஆனால், சமீபத்தில் பெய்த மழையால் பூக்கள் விளைச்சல் குறைந்து விலை சற்று உயர்ந்துள்ளது. பொதுவாக தீபாவளி, பொங்கல் காலங்களில் மல்லிகை கிலோ ரூ.4,000 வரை விற்கப்படும் நிலையில், தற்போது மார்க்கெட்டிற்கு 2 முதல் 3 டன் பூக்கள் வரத்து உள்ளது.
நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று விற்பனை சுமாராகவே இருந்ததாகவும், இன்று பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் கூறினர்.