சென்னை,
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, மாணவர் கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்புவதற்கு ஏதுவாக பண்டிகைக்கு மறுநாளான 9-ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 28-ந்தேதி அன்று பணிநாளாக அறிவித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளி வரை காய்கறி கடைகள் அனைத்தும் செயல்பட்டுவிட்டு, தீபாவளிக்கு மறுநாள் 9-ந்தேதி (திங்கட்கிழமை) கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்துக்கு ஒருநாள் முழு விடுமுறை அளிப்பது என வணிக வளாக அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது அத்தியாவசியத் தேவைகள் மற்றும் கொள்முதல்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம்போல் செயல்படும் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.