சென்னை
தீபாவளி பண்டிகை ரூ.100-க்கு 10 காய்கறிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பு கூட்டுறவு நிலையங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அன்றாட சமையலுக்கு தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்க செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 வகையான காய்கறிகள் அடங்கிய 'வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு' 100 ரூபாய்க்கு சலுகை விலையில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மூலம் இன்று முதல் 7-ந்தேதி வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 4 நடமாடும் காய்கறி கடைகள் மூலமாகவும் 'வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு' விற்பனை செய்யப்பட உள்ளது. வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், எலுமிச்சை, இஞ்சி, தேங்காய் ஆகிய 10 காய்கறிகள் அடங்கும்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா, அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் வெளியிட்டு உள்ள செய்தியில், விற்பனை நிலையங்களில் இந்த காய்கறி தொகுப்பை ஒருங்கிணைந்த விற்பனை நிலையங்களில் இந்த காய்கறி தொகுப்பை ஒருங்கிணைந்த தொகுப்பாக மட்டுமே ரூ.100-க்கு விற்பனை செய்ய வேண்டும். காய்கறிகளை பிரித்து தனித்தனியாக விற்பனை செய்யக்கூடாது.
ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும். தொகுப்பின் மீது காய்கறிகளின் விவரம், நிகர எடை, விலை மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட நாள் குறிப்பிடப்பட வேண்டும்.
காய்கறிகளை கொள்முதல் செய்யும்போது விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். காய்கறிகள் புதிதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்ட காய்கறிகள் தரம் பிரிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் எடையிடப்பட்டு, தனித்தனி உரைகளில் அடைக்கப்பட்டு 10 காய்கறிகளும் ஒரே பசுமை நெகிழிப்பையில் ஒருங்கிணைந்த தொகுப்பாக வழங்கப்பட வேண்டும்.
காய்கறிகள் விரைவில் கெடக்கூடியவை என்பதால், விற்பனை நிலைய வாரியான தேவையின் அடிப்படையில் நாள்தோறும் பேக்கிங் செய்யப்பட்டு, அன்றைய தினமே விற்பனை செய்யப்படும் வகையில் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.