தமிழக செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்: பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (நவ.4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி, பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிறப்பு ரெயில்

பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து நவம்பர் 6-ந் தேதி மாலை 4.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06575) மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து நவம்பர் 7-ந் தேதி பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06576) மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டை சென்றடைகிறது.

21 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (நவ.4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT