சென்னை,
அதிமுகவுடன் திமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
யார் நண்பர்கள் யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காண்பதற்கு இந்த தேர்தல் நல்ல பாடமாக அமைந்தது. மிக விரைவில் மாற்றம் வரும். நாங்கள் (திமுக) யார் என்பதை காட்டுவோம்.
அதிமுகவில் இருந்து விலகியவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதுபோல் எங்கள் கூட்டணியில் வெற்றிபெற்றுவிட்டு தவெகவில் இணைவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இணைய வேண்டும்.
இந்த தேர்தலே வித்தியாசமான தேர்தல். யாரும் விஜய் வெற்றிபெறுவார் என்று கூறவில்லை. அவர் எப்படியோ வந்துவிட்டார். இப்படியொரு அதிசயம் நடந்ததால் பலவீனமானவர்கள் பலியாகிவிட்டார்கள்.
என்றார்.
தேர்தல் முடிந்ததும் திமுகவும், அதிமுகவும் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளது குறித்து ஆர்.எஸ். பாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த ஆர்.எஸ். பாரதி கூறுகையில்,
அதிமுகவுடன் நாங்கள் பேசவும் இல்லை... கூட்டணியும் வைக்கவில்லை. அதிமுக தீண்டத்தகாத சக்தியைபோல் அக்கட்சியுடன் கூட்டணியே வைக்காத கட்சிபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
அதிமுகவுடன் நாங்கள் (திமுக) கூட்டணி வைத்தால் என்ன உலகமகா தவறா?. இந்திய கம்யூனிஸ்டு , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இரண்டாக உடைந்தது. இப்போது இரு கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு செல்லவில்லையா?
திமுகவை விட்டு அதிமுக பிரிந்து சென்று ஏறத்தாழ 54 ஆண்டுகள் ஆகிறது. அதற்காக நாங்கள் கூட்டணி வைக்கிறோம் என்று கூறவில்லை. ஆனால், அதிமுகவும், திமுகவும் சேர்ந்து கூட்டணி வைத்தால் அதில் ஒன்றும் தவறுமில்லை. அப்படி கூறினால் உலகமகா தவறா? அதிமுக எங்கள் (திமுக) பங்காளி போன்றவர்கள். திமுகவிடமிருந்து சென்றவர்கள்தானே அதிமுக.
நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி பேசவில்லை. அதிமுகவும், திமுகவும் தற்போது சட்டசபையில் ஒரே அணியில்தான் அமர்ந்துள்ளது. காலம் கனிந்துவிட்டது. இரு அணியையும் ஒரே அணியில் அமரவைத்துவிட்டது.
திமுகவும், அதிமுகவும் தற்போது ஒரே வரிசையில் அமர்ந்துள்ளது. இதைபார்க்கும்போது தொண்டர்கள் அனைவருமே திமுகவும், அதிமுகவும் இணைந்துவிட்டார்கள் என்பதுபோல தெரிகிறது என்கின்றனர். அதிமுகவும், திமுகவும் இணைந்ததற்கு காரணம் இவர்கள்தான் .
இவ்வாறு அவர் கூறினார்.