சிவகாசி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின. இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது.
118 எம்.எல்.ஏ.க்கள் என்ற பெரும்பான்மை இல்லாத சூழலில், த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பயனாக காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது. அக்கட்சிகளின் முழு ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார்.
எனினும், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணியாக அதிக இடங்களை கைப்பற்றி இருந்த சூழலில் அந்த இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க கூடிய சாதகமும் இருந்தது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடந்தது என தகவல் வெளியானது. ஆனால், இதனை தி.மு.க. நிராகரித்தது. அ.தி.மு.க. எதுவும் கூறாமல் இருந்து விட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டியளித்து உள்ளார். அவர், மே 4-ல் என்ன நடந்தது? என்பது பற்றி சிவகாசியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, தி.மு.க.வும், அ.தி.மு.க.வும், கூட்டணி அமைக்க பா.ஜ.க. கனெக்டிங் கால் போட்டது. பா.ஜ.க.வின் ஆணைக்கிணங்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து ஆட்சியமைக்க முயன்றன. அதில், இரு கட்சிகளும் உறுதியாக இருந்தன. பா.ஜ.க.வின் முயற்சிக்கு கவர்னர் மறைமுக ஒத்துழைப்பு வழங்கினார்.
இந்த தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி முயற்சி பற்றி முதலில் கம்யூனிஸ்டு கட்சியின் (எம்) தேசிய பொதுச்செயலாளர் பேபி வெளியே கூறினார். பின்னர், வி.சி.க. தலைவர் திருமாவளவன், சி.வி. சண்முகம் ஆகியோரும் இதனை கூறினார்கள். தமிழகத்தில் நேரடியாகவோ, மறைமுக அடிப்படையிலோ பா.ஜ.க. வரக்கூடாது என்பதற்காக எல்லா தியாகங்களையும் நாங்கள் செய்வோம் என்று கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கி விட்டு வெளியே இருந்து ஆதரவு தர திமு.க. முன்வந்தது. இதனை வெளியே கூறினால் தப்பாகி விடும் என்றுதான் இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்தோம். வெகுவிரைவில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்று கூறியுள்ளார்.
தி.மு.க.வை உற்சாகப்படுத்தவே த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் காங்கிரஸ் என தி.மு.க. கூறுகிறது. தோல்வி அடைந்ததும் தி.மு.க. பேசும் பேச்சு இதுதான் என்றும் கூறினார்.