தமிழக செய்திகள்

இரட்டைக்குழல் துப்பாக்கியாக திமுக - அதிமுக: சட்டசபையில் எதிர்ப்புகளுக்கு பதிலடி கொடுத்ததா தவெக அரசு?

தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

சென்னை,

இரட்டைக்குழல் துப்பாக்கியாக தி.மு.க. - அ.தி.மு.க., சட்டசபையில் த.வெ.க. அரசை எதிர்த்து நின்றபோதும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதா? என்பதை தொடர்ந்து பார்க்கப்போகிறோம்.

திராவிட கட்சிகளின் ஆதிக்கம்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. இதன் மூலம் 59 ஆண்டு கால தி.மு.க., அ.தி.மு.க. என்ற இருபெரும் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

தற்போது, தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 6 தொகுதிகள் காலியாக உள்ளன. மீதமுள்ள 228 தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 146 பேர் புதியவர்கள். த.வெ.க.வை பொறுத்தவரை, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உள்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என சுமார் 100 பேர் முதல் முறையாக சட்டசபைக்கு தேர்வானவர்கள்.

புத்தாக்க பயிற்சி

இதனால்தான், புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குவதற்கு முன்பு, 16, 17 ஆகிய தேதிகளில் எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின்போது அவையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?, அவை மரபுகள் என்ன? என்பது குறித்து எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கப்பட்டது. தமிழகத்தில் இதற்கு முன்பு தி.மு.க., அ.தி.மு.க. என்று மாறி மாறி 2 கட்சிகளும் ஆட்சியில் இருந்தது. அதாவது, ஒரு கட்சி ஆளுங்கட்சியாக இருந்தால், மற்றொரு கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது.

இரட்டைக்குழல் துப்பாக்கி

ஆனால், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்ற 2 கட்சிகளுமே இரட்டைக்குழல் துப்பாக்கி போல எதிர்க்கட்சிகளாக எதிர்த்து நிற்கின்றன. இதனால், த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் எப்படி இருக்கப்போகிறது?. எதிர்க்கட்சிகளின் எதிர் கணைகளை எவ்வாறு தடுக்கப்போகிறார்கள்?. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கப்போகிறது? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் எழுந்தன.

நிறைவு நாளில் விஜய் பேச்சு

தற்போது, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டம் நிறைவடைந்துள்ளது. கடந்த 19 மற்றும் 22-ந் தேதிகளில் நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் உடனுக்குடன் பதில் அளித்தனர். இந்த 2 நாள் விவாதத்தை அமைதியாக இருந்து கண்டுகளித்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், நிறைவு நாளான இன்று பட்டையை கிளப்பினார் என்றே சொல்லவேண்டும்.

சட்டசபையிலும் முத்திரை

கடந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பொருத்துக்கொள்ள முடியாமல், தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். மொத்தத்தில், முதல் தேர்தலில் முத்திரை பதித்ததுபோல், முதல் சட்டசபை கூட்டத்திலும் த.வெ.க. அரசு முத்திரை பதித்துள்ளது.