திருச்சி,
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
”200 இடங்களில் வெற்றி பெறுவோம் என தி.மு.க.வினர் கூறி வருவதாக சொல்கிறீர்கள். ஆனால் 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என்பதை அக்கட்சி தலைவர்கள் மாற்றி மாற்றி ஆளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் 90 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்தது போல் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அரசு கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.கொங்கு பகுதிகளில் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறவில்லை. பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள்.
எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க. கூட்டணி வலுவிழந்து உள்ளது. அ.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஓ.பி.எஸ். மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.