சென்னை,
போலி பதிப்பகங்களுக்கு திமுக ஆட்சியில் புத்தகங்கள் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாக தவெக ஐ.டி. விங் ஆவணம் வெளியிட்டுள்ளது.
கோவை காந்திபுரத்தில் தி.மு.க. ஆட்சியில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. த.வெ.க. ஆட்சி அமைந்ததை தொடர்ந்து பெரியார் அறிவுலகத்தை கடந்த மாதம் முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதனிடையே பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், புத்தகங்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
அதில், யாரும் அறியாத 'அகல் விளக்கு' என்ற பதிப்பகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட 1,800 புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், மற்ற பதிப்பகங்கள் ரூ.350-க்கு விற்கும் 300 பக்க நூலை ரூ.1,445-க்கு வாங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பதிப்பகத்தின் பல நூல்களில் தவறான தகவல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல பீனிக்ஸ் என்ற பதிப்பகத்தின் புத்தகங்களும், அதிக விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதனிடையே பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் திமுக ஊழல் செய்துள்ளதாக முதல்-அமைச்சர் விஜய் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில், "போலியான நூல்களில் ஜூன் மாதம் முத்திரை இடப்பட்டுள்ளது. போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?" என்று கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தது.
இந்த நிலையில் போலி பதிப்பகம் என்று கூறப்படும், 'அகல்விளக்கு' மற்றும் 'பீனிக்ஸ்' பதிப்பகங்களுக்கு திமுக ஆட்சியில்தான் புத்தகங்கள் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாக தவெக ஐ.டி. விங் ஆவணம் வெளியிட்டுள்ளது. அதன்படி 'பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ்' பதிப்பகத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதியும், 'அகல்விளக்கு' பதிப்பகத்துக்கு கடந்த பிப்ரவரி 14-ந்தேதியும் பொது நூலக இயக்ககம் கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது.