சென்னை,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
ஜமீன்களிலும் - பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று. நாற்பதுகளில் இருந்த பேறிஞர் அண்ணா, இருபதுகளில் இருந்த கலைஞர் உள்ளிட்ட தன் தம்பிமார்களுடன் கொட்டும் மழையில் தொடங்கிய தி.மு.கழகம் இன்று 78-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த 78 ஆண்டுகளில் பல எட்டாத உயரங்களுக்குத் தமிழ்ச்சமுதாயத்தை ஏற்றிவிட்ட பெருமை கழகத்துக்கு உண்டு. சமூக நீதி - மாநில உரிமை - பெண் விடுதலை - தொழில் வளர்ச்சி என கொள்கை அடித்தளத்தில்,
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், தன்னிகரற்ற மாநிலமாக்கியது வரை கழகம் ஆற்றிய பணிகள் ஏராளம். எத்தனையோ அடக்குமுறைகள் - ஏவப்பட்ட நெருக்கடிகள் - புதிய புதிய எதிரிகள், இத்தனைக்குப் பிறகும் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் துடிப்போடு நடைபோடுகிறது தி.மு.கழகம்.
நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கழகத்தின் மேன்மைக்கு அயராது உழைப்போம். கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல - நம் உயிர் என்று முழங்குவோம்! வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.