தமிழக செய்திகள்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக ம.தி.மு.க-வுக்கு தி.மு.க அழைப்பு

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக ம.தி.மு.க-வுக்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை,

சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கவுள்ள நிலையில் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அ.தி.மு.க மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிகளில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் என மொத்தம் 5 தொகுதிகள் இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த 2 கட்சிகள் தவிர, ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அதுபோல, காங்கிரஸ் கட்சியுடனும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவுகிறது.

இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக ம.தி.மு.க-வுக்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் 2-ம் கட்டமாக பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே தி.மு.க அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என வைகோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.