தமிழக செய்திகள்

தி.மு.க.வில் இன்று முதல் வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேர்காணல் நடத்துகிறார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஆளும் தி.மு.க. 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் (28), மதிமுக (4), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (2) ஆகிய 5 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. எஞ்சிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க. தீவிரப்படுத்தி வருகிறது.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை ஒருபுறம் நடத்தி வரும் தி.மு.க. மறுபுறம் தங்கள் கட்சி வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு கடந்த மாதம் 20ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்து 372 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், தி.மு.க.வில் விருப்ப மனு முடிவடைந்த நிலையில் வேட்பாளர் நேர்காணல் இன்று (செவ்வாய் கிழமை) தொடங்க உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த தி.மு.க.வினரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்த உள்ளார். இன்று தொடங்கி 22ம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.