தமிழக செய்திகள்

தமிழக உரிமையை பாதுகாக்க திமுக-கம்யூனிஸ்டுகள் கைகோர்க்கும்: உதயநிதி ஸ்டாலின்

நீட் எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல என்று உதயநிதி கூறினார்

சென்னை,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்வில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மார்பளவு திருவுருவச் சிலையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து “அம்மாச்சி - கற்பனையின் முதல் ஆசிரியர்” என்ற நூலை வெளியிட்டார்.

அதன்பின்னர் விழாவில் பேசியதாவது:-

தோழர் நல்லகண்ணுவின் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் நல்லகண்ணுவுக்கு சிலை அமைத்ததன் மூலம் யாரை நாம் கொண்டாட வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது. மக்களுக்கான களப் போராளிகளை கொண்டாடுவதை விட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுப்பவர்களை சமூகம் அதிகம் கொண்டாடுகிறது.

கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது தனிப்பாசம்

2016-ஆம் ஆண்டு திமுக வெற்றி வாய்ப்பை இழந்த போதும், கருணாநிதி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, "திமுக ஆட்சியை இழந்ததை விட, தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத சட்டப்பேரவை அமைந்திருக்கிறது. அதுதான் எனக்கு வருத்தம்” என தெரிவித்தார். அந்தளவுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது கருணாநிதிக்கு தனிப்பாசம் இருந்தது.

கருணாநிதி வழியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தனிப் பாசம் கொண்டுள்ளார். தமிழ் மொழி உரிமையையும், தமிழ்நாட்டு உரிமையையும் பாதுகாக்க திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றும் ஓரணியில் கைகோர்த்து நிற்கும். தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக எது நடந்தாலும் திமுக-கம்யூனிஸ்ட் ஓரணியில் நிற்கும்.

நீட் எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. நீட் நுழைவுத் தேர்வு என்று வந்ததோ அன்றிலிருந்தே திமுக எதிர்த்து வருகிறது. 2021 திமுக ஆட்சி அமைந்ததும் நீட் பாதிப்பை கண்டறிய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நீட் விலக்கு வேண்டி திமுக அரசு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை கொண்டு வந்தோம்.

அதற்கு கவர்னர் ஒப்புதல் தராத நிலையில், இதற்காக சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியது திமுக தான். நீட் தேர்வு போராட்டம் முடிந்துவிட்டதாக கருதவில்லை. இப்போதுதான் இன்னும் வீரியமாக ஆரம்பித்துள்ளது. நீட் தேர்வை முற்றிலும் ஒழிப்பதற்கான தொடக்கமாகத் தான் இந்தப் போராட்டம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.