தமிழக செய்திகள்

கரூரிலேயே விஜய்யை முடித்திருக்கலாம் என பேசிய திமுக கவுன்சிலர் கைது

டிட்டா சரவணன் மீது புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர்.

சென்னை,

அன்பில் மகேஷ் கைது

கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியை புழல் சிறைக்கு அழைத்து வந்தனர் அப்போது புழல் சிறை வாசலில் தி.மு.க.வினர் திரண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

விஜய்யை முடித்திருக்கலாம்...

அப்போது வேலூர் காட்பாடியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் டிட்டா சரவணன் முதல்-அமைச்சர் விஜய் குறித்து “தைரியமாக இருங்க தலைவரே... நம்ம வெளியே வந்துவிடலாம்... தலைவரே அன்றைக்கே அவனை கரூரில் வைத்து போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?... தலைவரே என ஆவேசமாக கூச்சலிட்டார். மேலும் அதே வார்த்தையை (கரூரில் வைத்து போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?) அருகில் இருந்த நபரிடமும் அவர் பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திமுக நிர்வாகியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்தனர். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிட்டா சரவணனை வலைவீசி தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில், கரூரிலேயே விஜய்யை முடித்திருக்கலாம் என பேசிய திமுக கவுன்சிலர் டிட்டா சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு செல்வது போல் போக்குகாட்டிவிட்டு விழுப்புரத்தில் பிரேம் என்பவர் வீட்டில் இருந்த டிட்டா சரவணனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதைபோல டிட்டா சரவணனுக்கு அடைக்கலம் கொடுத்த விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏசிகே பிரேம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT