தமிழக செய்திகள்

விமான பணி பெண்ணிடம் அத்துமீறல் - கட்சியில் இருந்து திமுக கவுன்சிலர் இடை நீக்கம்

விமானப்பணிப்பெண்ணிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி நேற்று கைது செய்யப்பட்டார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 25-ந்தேதி டெல்லிக்கு இண்டிகோ நிறுவன விமானம் சென்றது. அதில் பயணம் செய்த 2 பேர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர்களை விமான பணிப்பெண் இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார். அப்போது போதையில் இருந்த 2 பேரும் விமான பணிப்பெண்ணிடம் நீ எந்த ஊர்? என்று கேட்டுள்ளனர். அவர் மதுரை என கூறியபோது, மதுரையில் ஆண்டிப்பட்டியா, கல்லுப்பட்டியா? என்று கூறி கிண்டல் அடித்துள்ளனர். மேலும் பணிப்பெண்னை இருவரும் ஒருமையில் அழைத்து அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விமான பணிப்பெண் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் திருவள்ளூர் 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் (வயது 36), அவரது நண்பர் தியாகு (36) இருவரும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. விசாரணைக்காக அழைத்தபோதும் அவர்கள் ஆஜராகாமல் இருந்த நிலையில், டெல்லிக்கு சுற்றுலா சென்று விட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விமானப்பணிப்பெணிடம் அத்துமீறியதால் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபாகரனை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்து துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்