தமிழக செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்; திமுக தேர்தல் அறிக்கை

திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கிய திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

திமுக தேர்தல் அறிக்கை விவரம்:-

* 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 19 லட்சம் குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கினோம். இனி கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

* மகளிர் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்

* சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, 18 வயதிற்குட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற கொடுங்குற்றம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்படும்

* இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும்

* தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்

* முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 5 லட்சமாகவும், காப்பீட்டுத்தொகை ரூ. 10 லட்சமாகவும் உயர்த்தப்படும்

* கல்லூரி மாணவ, மாணவியரின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்க புதுமைப்பெண் , தமிழ் புதல்வன் திட்டத்தின்படி மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 1,000 இனி ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்

* முதியோர் உதவித்தொகை ரூ. 1,200-லிருந்து ரூ. 2,000 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1,500-லிருந்து ரூ. 2,500 ஆகவும் உயர்த்தப்படும்.

* வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள இந்த இல்லத்தரசி கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களை சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

திமுக தேர்தல் அறிக்கை முழு விவரம்:-

DMK Manifesto 2026 (1).pdf
Preview
DMK Manifesto 2026.docx
Preview