தமிழக செய்திகள்

அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி மோசடி: திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்

குன்னம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர்.

சென்னை,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர். இவர் கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செயல்பட்டார். மேலும், மின்சாரத்துறையும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

ரூ. 23 லட்சம் லஞ்சம் - கைது

இதனிடையே, தனது மகனுக்கு போக்குவரத்துத்துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 23 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளராக கூறப்படும் இளஞ்செழியன் மீது ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிவசங்கரின் உதவியாளராக கூறப்படும் இளஞ்செழியனை கடந்த 24ம் தேதி கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இளஞ்செழியனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவசங்கருக்கு சம்மன்

இந்நிலையில், அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ. 23 லட்சம் மோசடி செய்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 23 லட்சம் மோசடி செய்ததாக இளஞ்செழியன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சென்னை காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கரை சந்திக்க இளஞ்செழியன் ஏற்பாடு செய்தார். இளஞ்செழியனின் ஏற்பாட்டில் தலைமை செயலகத்தில் சிவசங்கரை சந்தித்தோம். அப்போது, எனது மகனுக்கு போக்குவரத்து துறையில் வேலை உறுதி என சிவசங்கர் நம்பிக்கை கொடுத்தார். மகன் வேலைக்காக நான் கொடுத்த ரூ. 23 லட்சம் பணம் தன்னிடம் வந்து சேர்ந்துவிட்டதாக சிவசங்கர் உறுதிபடுத்தினார். ஆனால், பணத்தை வாங்கிக்கொண்டு வேலை கொடுக்காமல் இளஞ்செழியனும், முன்னாள் அமைச்சர் சிவசங்கரும் தன்னை ஏமாற்றிவிட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் பெயரை சேர்த்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 23 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.