தமிழக செய்திகள்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தி.மு.க.வினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டபோது, ​​காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக, முன்னாள் திமுக அமைச்சர் சேகர் பாபு மற்றும் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் மீது வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ந்தேதி அன்பில் மகேசுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கைது

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி வி.லட்சுமி நாராயணன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வாக்குவாதம்

விசாரணைக்குப் பின்னர் அன்பில் மகேஸ் கைது நடவடிக்கை நடைபெற்ற இடத்தில், அவரது ஆதரவாளர்களும் கட்சி நிர்வாகிகளும் பெருமளவில் திரண்டனர்.

அப்போது அங்குப் பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையில் காவல் துறையினரை நோக்கி அவதூறான சொற்களைப் பேசியதாகவும், அரசு அதிகாரிகளின் கடமையை செய்ய விடாமல் தடுத்து இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் காவல் அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில் துரிதமான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வழக்குப்பதிவு

இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்புடைய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை தவிர, கைது சம்பவத்தின் போது காவல் துறையினருக்கு எதிராக செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 10 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT