சென்னை,
மாணவ, மாணவியரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சுத்தமான குடிநீரைக் கூட உறுதி செய்ய முடியாத தவெக அரசு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி அரசுப் பள்ளியில், பிளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரை அருந்திய 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.
மாணவ, மாணவியரின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டிய அரசுப் பள்ளியில், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாதுகாப்பான குடிநீரைக் கூட முறையாக வழங்க முடியாமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட அரசு நிர்வாகத்தால் மாணவ, மாணவியரின் உடல்நலம் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
தனக்குச் சம்பந்தமே இல்லாத துறைகள் தொடர்பான கேள்விகளுக்குக்கூட தாமாக முன்வந்து அடுக்குமொழியில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இனியாவது தன் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நிலவும் அவலநிலையைப் போக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.