சென்னை,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்தைத் தலைகுனியச் செய்த கையாலாகாத திமுக அரசுக்கு முடிவு கட்டவும், மீண்டும் நமது தாய் மண்ணை தலைநிமிர செய்யவும் மாநிலம் முழுவதும்
பாஜக சார்பில் நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டங்களின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் மாலை, கோவை மாவட்டம் காளப்பட்டியில் உள்ள நேரு நகரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
இன்னும் 50 நாட்களில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை தமிழகம் சந்திக்க இருக்கிறது. இதுவரை தமிழகம் காணாத ஒரு மோசமான ஆட்சியை கடந்த 5 ஆண்டு காலத்தில் திமுக நமக்கு காட்டியிருக்கிறது. 2006-11 வரையிலான திமுக ஆட்சி இருண்ட ஆட்சியாக இருந்தது. 2021 முதல் தற்போது வரையிலான திமுக ஆட்சி கொடுங்கோலாட்சியாக இருக்கிறது. தேர்தல் எப்போது வரும் என மக்களே காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.
சமீபத்தில், திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கோவை மக்களை இழிவுபடுத்திப் பேசினார். கொரோனா பெருந்தொற்றின் போது, திமுகவிற்கு வாக்களிக்காத கோவை மக்களுக்கு குறைந்தளவு தடுப்பூசி வழங்கி திமுக அரசு வஞ்சித்தது. திமுகவிற்கு வாக்களிக்காத மக்களை, திமுக அரசு நடத்தும் விதம் இதுவே. கோவை பகுதியில் மட்டும், கடந்த 3 ஆண்டுகளில், 325 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. அதற்கு காரணம், நூற்பாலைகளுக்கான 1 யூனிட் மின்சாரத்தை திமுக அரசு ரூ.9.25-க்கு வழங்குவது தான். தொழில்வளம் நிறைந்துள்ள கோவையில் தொழிற்சாலைகளை வளர்க்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை.
2011 கோவை மக்கள் தொகையை கணக்கிட்டு கோவை மெட்ரோ திட்டத்திற்கு தவறான அறிக்கையைத் தயாரித்து கொடுத்தால் மத்திய அரசு எப்படி ஒப்புதல் வழங்கும்? மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை, மெட்ரோ இணைப்பிற்கான இடவசதிகள் உள்ளிட்ட தகவல்களை முறைப்படி வழங்காமல் அறிக்கை கொடுத்தால் ஒப்புதல் எப்படி கிடைக்கும்? ஆனால், தமிழக முதல்-அமைச்சர் , மத்திய அரசு கோவையை வஞ்சித்துவிட்டது என வாய்கூசாமல் பொய் பேசுகிறார். திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தலாக வரும் சட்டமன்ற தேர்தல் அமையப்போவது உறுதி. என தெரிவித்துள்ளார்.