தமிழக செய்திகள்

திமுக ராமநாதபுரத்தை குப்பை நகரமாக மாற்றி இருக்கிறது - அண்ணாமலை

போதைப்பொருள் கடத்தும் இடமாக ராமநாதபுரம் திமுக அலுவலகம் மாறியுள்ளது.

ராமநாதபுரம்,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, 'கலாசார தலைநகரம்' என்ற பெருமையை கொண்ட தமிழகத்தை தனது காட்டாட்சியால் 'குற்றங்களின் தலைநகரமாக’ மாற்றி வைத்திருக்கும் தீயசக்தி திமுகவை விரட்டியடித்து, தமிழகத்தின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியோடு களம் இறங்கியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் ஜிபிஎஸ் கே. நாகேந்திரன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

ராமேஸ்வரம் பகுதி மக்கள் நலம் பெறும் வண்ணம் ரூ.19 கோடி மதிப்பில், 50 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. அதே அம்ருத் திட்டத்தின் கீழ், புதிய பேருந்து நிலையத்தில் 100 கடைகள் அமைப்பதற்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுகவினர் தனியார் ஓட்டலில் ஏலம் விட்டு யாருக்கும் கடை ஒதுக்கப்படாமல் அதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள். திமுக கடந்த 5 ஆண்டுகளாக குப்பை நகரமாக ராமநாதபுரத்தை மாற்றி இருக்கிறார்கள். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை கூட அமைத்து தர முடியாமல் மாணவர்கள் 20 கி.மீ கடந்து செல்லும் அவல நிலை இருக்கும்போது, சமூக நீதி பற்றி பேச திமுக வெட்கப்பட வேண்டும்.

2022 ஆம் ஆண்டு நவம்பரில், திமுக கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ், முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் ஆகியோர் ரூ.360 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய வழக்கில் கைதானார்கள். 2024 ஆம் ஆண்டு, சென்னையில் ரூ.70 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்தியதாக ராமநாதபுரம் திமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகி இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரும் இதே மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி தான். இப்படி போதைப்பொருள் கடத்தும் இடமாக ராமநாதபுரம் திமுக அலுவலகம் மாறியுள்ளது.

போதைபொருள் புழக்கத்தை ஒழிக்கவும், போதையில்லா தமிழகம் உருவாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் ஜிபிஎஸ் கே. நாகேந்திரன் அவர்களை மகத்தான வெற்றி பெற வைக்க ராமநாதபுரம் மக்கள் தயாராக இருப்பது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! வளர்ச்சியடைந்த ராமநாதபுரம் உருவாகட்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.