தமிழக செய்திகள்

19-வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி

மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் 35 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தலின்போது 19-வது வார்டில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விண்ணப்பித்திருந்த அன்னதாட்சி என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் அந்த வார்டில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள், நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை 8 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் சனல்குமார் முன்னிலையில் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. வேட்பாளர் கீதா 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொள்ளிடம் ஒன்றியம், கூத்தியம்பேட்டை ஊராட்சியில் 16-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மஞ்சு 110 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இவருக்கு தேர்தல் அலுவலர் கோவிந்தராஜ் வெற்றி சான்றிதழை வழங்கினார்.