தமிழக செய்திகள்

‘தி.மு.க. வெளியில் வேறு, உள்ளே வேறு’ - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்

சி.பி.எம். கட்சியின் ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் தி.மு.க.வை விமர்சித்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் இணைந்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு ஆட்சியமைத்தது.

இதன் பின்னர் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மற்றும் பிற ஆதரவு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க த.வெ.க. அரசு முன்வந்தது. இதன்படி காங்கிரஸ், வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெற்றனர்.

இதற்கிடையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது தி.மு.க.வினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சி.பி.எம்.) மாநில செயலாளர் பெ.சண்முகம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், த.வெ.க. ஆட்சி அமைக்க சி.பி.எம். ஆதரவு அளித்தது ஏன்? என்பது குறித்து அவர் விளக்கியிருந்தார்.

மேலும், அ.தி.மு.க. - தி.மு.க. அணியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்ற யோசனையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். நேற்றைய தினம் தமிழக சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று எடுத்த முடிவானது அவர்கள் சுயாட்சியாக எடுத்த முடிவு என்று கூறினார்.

இந்த நிலையில் சி.பி.எம். கட்சியின் ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் இன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு புடலங்காயின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘பா.ஜ.க.+ தி.மு.க. + அ.தி.மு.க. எனும் கொள்கை புடலங்காய்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ‘தி.மு.க. வெளியில் வேறு, உள்ளே வேறு’ என்று சி.பி.எம். கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.