தமிழக செய்திகள்

‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரையை இன்று தொடங்குகிறது தி.மு.க.

இன்று தொடங்கும் தி.மு.க.வின் தமிழ்நாடு தலைகுனியாது பிரசாரம் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் இருக்கும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மக்களோடு இருந்து இதுவரை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதற்காக 'தமிழ்நாடு தலைகுனியாது' பரப்புரைப் பயணத்தை திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.

முன்னதாக தமிழ்நாடு 17-வது சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

ஆளும் தி.மு.க. இளைஞரணி, மகளிரணி சார்பில் மண்டல மாநாடுகளை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 20-ந் தேதி அன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ‘தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பிப்ரவரி 1-ந் தேதி ( இன்று) முதல் பிரசாரம் மேற்கொள்ளப்படும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க.வில் இந்த பிரசாரத்தை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கோவி செழியன், பழனிவேல் தியாகராஜன், எம்.பி.க் கள் திருச்சி சிவா, எஸ்.ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன் உள்பட 20 பேரை நட்சத்திர பேச்சாளர்களாக தி.மு.க. தலைமை அறிவித்தது. அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பிரசார களத்தில் இறங்குகிறார்கள்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், மக்களுடன் இருந்து மக்களோடு வாழ்ந்து, அவர்களுடைய வீடுகளிலேயே உணவருந்தி அவர்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்களை விளக்கமாக சொல்லி, தி.மு.க.வின் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகளை களையெடுப்பதற்காக இந்த பிரசார திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்தனர்.

மக்களை நேரடியாக சந்திப்பதோடு பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளனர். இன்று தொடங்கும் தி.மு.க.வின் தமிழ்நாடு தலைகுனியாது பிரசாரம் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.

தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் என 4 முனை போட்டியை தமிழக தேர்தல் களம் சந்திக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.