தமிழக செய்திகள்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக தனி ஆளாக நின்று போராடியவர் டிராபிக் ராமசாமி. இவர் நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகளை தொடர்ந்து, அதன் மூலம் பல்வேறு சமுதாய பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த டிராபிக் ராமசாமி, சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 87. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நல அக்கறையுடனும் சட்டத்தின் துணை கொண்டும், தனது கடைசி மூச்சுவரை சளைக்காத சமூகப் போராளியாக வாழ்ந்த பெரியவர் டிராபிக் ராமசாமி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகச் சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சற்றும் சமரசமின்றி அவற்றை அகற்றுவதற்காக சட்டத்தையே ஆயுதமாகப் பயன்படுத்திய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள். சாலைவிதிகளைப் பற்றி சாமானிய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக இருந்தவர்.

பொதுநலத்துக்காக வழக்குகள் தொடுப்பதையே தனது பொதுவாழ்க்கையாக்கிக் கொண்ட பெரிய மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.