சென்னை,
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஜே.இ.இ. முதன்மை தேர்வும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி பல மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஒடிசா மாநில முதலமைச்சர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் நாடு முழுவதும் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.