தமிழக செய்திகள்

தவெக வரவால் திருச்சி மாவட்டத்தில் 19.73 சதவீத வாக்குகளை இழந்த திமுக..!

கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 52.48 சதவீதம் வாக்குகளை தி.மு.க. பெற்று இருந்தது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுவார்கள். அந்த அளவுக்கு தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு மாவட்டத்தை தனது கட் டுப்பாட்டில் வைத்திருப்பார். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் திருச்சியில் 2021-ம் ஆண்டு மிகப்பெரிய திருப்பு முனை மாநாட்டை நடத்தி தி.மு.க. ஆட்சி உறுதுணையாக இருந்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 52.48 சதவீதம் வாக்குகளை தி.மு.க. பெற்று இருந்தது. அதுபோல் கடந்த தேர்தலில் 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவினாலும் சரசரியாக 32.02 சதவீதமும், நாம் தமிழர் கட்சி சராசரியாக 8.13 சதவீதமும் வாக்குகளை பெற்றன.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் துறையூர் தொகுதியில் காங்கிரசும், மற்ற 8 இடங்களில் தி.மு.க. வேட்பாளர்களும் களம் இறங்கினர். அதுபோல் அ.தி.மு.க. கூட்டணியில் திருச்சி மேற்கில் அ.ம.மு.க.வும், மற்ற 8 தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களும் களம் இறங்கினர். அதே நேரம் த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை 9 தொகுதியிலும் தனித்து களம் இறங்கியது.

தமிழகம் முழுவதும் 108 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்றது. இதனால் திராவிட கட்சிகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. வசம் இருந்த 9 தொகுதிகளில் திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும் பூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 6 தொகுதிகளை த.வெ.க.வும், லால்குடி தொகுதியை அ.தி.மு.க.வும் கைப்பற்றியது. திருச்சி மேற்கு, மண்ணச்சநல்லூர் ஆகிய 2 தொகுதிகளை மட்டுமே தி.மு.க.வால் தக்க வைக்க முடிந்தது. 7 தொகுதிகளை தி.மு.க. இழந்தது.

திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 38.61 சதவீதம் வாக்குகளை த.வெ.க. அள்ளியது. அதிகபட்சமாக திருச்சி கிழக்கில் போட் டியிட்ட த.வெ.க. தலைவர் விஜய் 50.07 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். த.வெ.க. வரவால் திருச்சி மாவட்டத் தில் சராசரியாக தி.மு.க. 19.73 சதவீதமும், அ.தி.மு.க. 9.30 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 4.08 சதவீதமும் வாக்குகளை இழந்துள்ளன.

திருச்சி மேற்கு, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளை தி.மு.க. தக்க வைத்திருந்தாலும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட திருச்சி மேற்கில் 19.58 சதவீதமும், மண்ணச்சநல்லூரில் 20.32 சதவீதமும் வாக்குகளை தி.மு.க. இழந்துள்ளது. அதுபோல் தி.மு.க. வசம் இருந்த லால்குடி தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றினாலும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 6.07 சதவீதம் வாக்குகளை அ.தி.மு.க. இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.