சென்னை,
த.வெ.க. அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டி.சரத்குமார், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ குறித்து விளக்கமளித்த அமைச்சர் டி.சரத்குமார், தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அமைச்சர் டி.சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் சென்னை எழும்பூரில் இன்று தி.மு.க. மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்திற்கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறாததால் மேடை அமைக்க அனுமதிக்க முடியாது என கூறினர். இதையடுத்து தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து காவல்துறை வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.