தமிழக செய்திகள்

திமுகவினர் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்; மு.க.ஸ்டாலின்

விசிக, ஐயூஎம்எல் மீது திமுக எம்.பி. ஆ.ராசா கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றது. இதையடுத்து, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் (விசிக), கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து, தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. தவெக அரசில் காங்கிரஸ் 2 அமைச்சர்கள், விசிக 1 அமைச்சர், ஐயூஎம்எல் 1 அமைச்சர் என 4 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால், திமுக கூட்டணியில் இருந்து இந்த கட்சிகள் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, திமுக கூட்டணியில் இடம்பெற்று பின்னர் தவெகவுக்கு ஆதரவு அளித்த கட்சிகளை திமுக தரப்பு விமர்சனம் செய்து வருகிறது.

அந்த வகையில் விசிக, ஐயூஎம்எல் மீது திமுக எம்.பி. ஆ.ராசா கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’

மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’

வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு

முட்டுக் கொடுக்குமென்றால்;

பூ முடத்தவனை பறந்தள்ளி —

புணர்ச்சிக்கு வேறிடம்

தேடுவதில் தவறில்லை!

பெரியாரின்

‘காலதேச வர்த்தமான’ தத்திற்கு

காத்திருப்போம் ; என்றாலும்

களமாடுவோம் !

வெற்றி நமக்கே!

இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்த பதிவுக்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில் இந்த பதிவை ஆ.ராசா நீக்கினார். பின்னர், ஆ.ராசா வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில்,

என் வீட்டுத் தோட்டத்துத்

தென்னை

கூனி வளைந்து

எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்

அதற்குப் பெயர்

”முடத்தெங்கு”!

அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?

வாழ்க தமிழ்!

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுகவினர் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

திமுகவினருக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.