திருச்செந்தூர்
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைத்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். இவர் தவெக அரசு மீதும் முதல்-அமைச்சர் விஜய் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன் முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். மேலும் சட்டசபையில் முதல்-அமைச்சர் அமர்ந்திருப்பது குறித்தும் விமர்சனம் செய்தார்.
முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நிர்வாகிகள் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் பரவியது. இதையடுத்து, முன் ஜாமின் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஏன் இதுபோல பேச வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், முன் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்தபோது அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது காரில் ஏறி காவல் நிலையத்திற்கு வருவதாக கூறியதை ஏற்க மறுத்த போலீசார் காரில் இருந்து அவரை இறக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.